search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டம் திருவிழா"

    • பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பெருந்திருவிழாவாகும்.
    • அக்னி குண்டத்தில் கால்நடைகள் இறங்குவது தனிச்சிறப்பாகும்.

    * பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள்.

    * இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும்.

    * குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும். 

    * இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    * தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல.

    * மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

    * இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது.

    * முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

    * இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.

    * முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 3 சக்கர நாற்காலிகள் உள்ளன. நுழைவு வாயிலில் இருந்து சன்னதியை எளிதில் சென்றடையும் வகையில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

    * இக்கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பாக 12 முடிநீக்கும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக முடி எடுக்கப்பட்டு வருகிறது.

    * இக்கோவிலின் மேற்குபகுதியில் பவானிசாகர்-பண்ணாரி சாலையில் மருத்துவ மையம் துவங்கப்பட்டு அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது. இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் மற்றும் இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சுழற்சிமுறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    * முடிகாணிக்கை மண்டபத்திற்கு அருகில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக குளியலறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முடிகாணிக்கை செலுத்தும் குழந்தைகளுக்கு முடி காணிக்கை மண்டபத்தில் சுடுநீர் எந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

    * நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தேங்காயைப் போல உருண்டு திரண்டு உள்ளன. தேங்காய் சிதறுவது போல நமது பாவங்களும் சிதறுண்டு போகவே நாம் பண்ணாரி அம்மன் கோவிலில் சிதறுகாய் உடைத்து வழிபடுகிறோம்.

    * இறைவன் கல்பகாலம் முடிந்து மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும்போது முதன் முதலில் தண்ணீரையே தோற்றுவிக்கிறான். அதனை நினைவு படுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே தெப்ப உற்சவம்.

    குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர குண்டம் இறங்கினர்.

     மேலும் சிலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர். மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கின்றனர். இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது.

    • பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு.
    • பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா’ புகழ்பெற்றது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்ற ஊரில் உள்ளது, பண்ணாரி அம்மன் கோவில். ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியில் அமைந்த மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இது பார்க்கப்படுகிறது. இங்கு பண்ணாரி அம்மன், சுயம்புவாக லிங்க வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பண்ணாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை இருக்கிறாள். பொதுவாக அம்மன் ஆலயங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயம் தெற்கு நோக்கி உள்ளது.

    தல வரலாறு

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக, இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது. அப்போது இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இப்பகுதியில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். தோரணப்பள்ளம் என்ற அந்தக் காட்டாறு, இவ்வாலயம் அமைந்த இடத்திற்கு மேற்கு புறத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பலரும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக இந்த வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

    அவர்கள் வனப்பகுதியிலேயே மாடுகளுக்கு பட்டிகளை அமைத்திருந்தனர். காலையில் அந்த வனத்திற்குள் மாடுகளை மேய விட்டு விட்டு, மாலையில் பட்டியில் அடைத்து, தாங்களும் அங்கேயே தங்கிக்கொள்வார்கள். அதோடு காலையிலும், மாலையிலும் பசுக்களிடம் இருந்து பாலைக் கறந்து, அதன் உரிமையாளர்களிடம் சேர்த்துவிடுவர். அப்போது ஒரு பட்டியில் இருந்த காராம்பசு ஒன்று, பால் கறப்பதற்குச் சென்றால், பால் சுரக்காமலும், தன்னுடைய கன்றுக்கும் கொடுக்காமலும் இருப்பதை அந்தப் பட்டியை பராமரிப்பவன் அறிந்தான்.

    அவன் மறுநாள் அந்த காராம் பசுவை பின் தொடர்ந்தான். அந்தப் பசுவானது, ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலை தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான். இந்நிகழ்வைக் கண்ட அவன் மறுநாள் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் நடந்ததைப் பற்றி விவரித்தான். அவர்கள் மறுநாள், பசுவை பின் தொடர்ந்து

    குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு அதே இடத்தில் பசு தன்னுடைய பாலை தானாக சுரப்பதை அனைவரும் கண்டனர். இந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பசு அங்கிருந்து அகன்றதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் இருந்த கணாங்கு புற்களை அகற்றியபோது, அங்கே வேங்கை மரத்தின் அடியில் ஒரு புற்றும், அதன் அருகில் சுயம்பு லிங்க திருவுருவமும் இருப்பதைக் கண்டனர்.

    அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் அருள் வந்து, தெய்வ வாக்கை கூறினார். "நான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரில் இருந்து பொதி மாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன். இங்கு காணப்படும் எழில் மிகுந்த இயற்கைச் சூழலில் லயித்து, இங்கேயே தங்கி விட்டேன். என்னை பண்ணாரி மாரியம்மன் என்ற பெயரில் போற்றி வழிபடுங்கள்" என்றார்.

     பின்னர் அன்னையின் அருள்வாக்குப்படி அந்த இடத்திலேயே கணாங்கு புற்களைக் கொண்டு ஒரு குடில் அமைத்து, கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அம்மனை வழிபாடு செய்து வந்தனர். பின்பு ஊர் மக்களும், பண வசதி படைத்தவர்களும் கூடிப் பேசி, அம்மனுக்கு விமானத்துடன் கூடிய கோவிலை அமைத்தனர். அந்த ஆலயத்தில் பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு செய்யத் தொடங்கினர்.

    தற்போதைய பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், அழகிய கோபுரத்துடனும், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றுடன் அழகிய சிற்பங்களைக் கொண்டு கண்கவர் ஆலயமாக பொழிவுடன் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா' புகழ்பெற்றது. இந்த ஆலயத்தில் விபூதி பிரசாதம் கிடையாது. அதற்கு பதிலாக புற்று மண்தான், விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அம்மை நோய் பாதிப்பு உள்ளவர்கள், குழந்தை வரம், வேலைவாய்ப்பு வேண்டுவோர் வழிபடக்கூடிய முக்கிய ஆலயமாக இந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கிச் சென்று, அம்மை நோய் பாதித்தவர்களின் மீது வைத்தால், அம்மை நோய் நீங்கும் என்கிறார்கள். திருமண பாக்கியம் கைகூடாதவர்கள், கை- கால் உறுப்பு குறைபாடு உள்ளவர்கள், விவசாயம் செழிக்க வேண்டுவோர், இவ்வாலய அம்மனை வேண்டிக்கொண்டால் பிரார்த்தனை கைகூடும்.

    இவ்வாலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்கள், உருவத்தகடுகள் (கை, கால், கண்) வாங்கி, அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகிறார்கள். மேலும் அக்னி குண்டம் இறங்குதல், வேல் எடுத்து சுத்துதல், கிடா வெட்டுதல், அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக, ஆராதனைகள் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

     அக்னி குண்டம் இறங்கும் விழா

    இவ்வாலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் விழா, மிகவும் பிரசித்திப்பெற்றது. அக்னி குண்டம் ஏற்படுத்துவதற்காக பக்தர்கள் காட்டிற்குச் சென்று மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்பார்கள்) எடுத்து வந்து, மலைபோல் குவித்து, அதனை எரித்து 8 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக தயார் செய்வார்கள். அந்த குண்டத்தில் முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார்.

    பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், நடை சாற்றும் வரை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கிக் கொண்டே இருப்பார்கள். பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்ததும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.

    அமைவிடம்

    சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி திருத்தலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து 77 கிலோமீட்டர், கோவையில் இருந்து 82 கிலோமீட்டர், திருப்பூரில் இருந்து 65 கிலோமீட்டர், சேலத்தில் இருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் இருக்கிறது.

    • பக்தர்கள் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன்.
    • குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் மிக கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடை பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொட ங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திரு வீதி உலா புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து 19-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோவிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து எரி கரும்புகளை காணிக்கை யாக செலுத்தி வந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்த இரவு மழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. குண்டம் இறங்குவ தற்கான லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

     இதையடுத்து சரியாக அதிகாலை 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கு தெய்வமே என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து வீதி உலா கொண்டு செலல்ப்பட்ட சப்பரம் படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.

    அதை த்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழி பட்டபடி குண்டம் இறகினர். இதில் சுமார் லட்சக்கண க்கான பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி கொண்டே இருந்தனர். குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

     தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர். அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர்.

    நாளை மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 28-ந் தேதி மஞ்சள் நீராடுதலும், 29-ந் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் குண்டம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி கடந்த 22-ந் தேதி நள்ளிரவு நடந்தது.

    நேற்று காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் தொடங்கியது. இதில் 41 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. குண்டத்தில் பூக்கள் தூவப்பட்டு வழிபாடு நடந்தது.

    குண்டத்துக்கு தேவை யான விறகுகளை கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பல கிராமங்களில் இருந்து மக்கள் பால்குடும் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்பட்டது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர். சிலர் தங்கள் கைகளில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குண்டம் இறங்கியது காண்போரை பரவசப்படுத்தியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான உதவிகளை செய்தனர்.

    குண்டம் திருவிழாவை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில், குண்டம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாசாணி அம்மனை தரிசனம் செய்தனர்.

    கோவை, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனைமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனைமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குண்டம் திருவிழாவை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி காலை கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை நடக்கிறது. 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    இதனையொட்டி கோவிலில் நள்ளிரவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்ததும் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர்.

    அங்கு மயான மண்ணை கொண்டு மாசாணியம்மன் திருவுருவம் உருவாக்கப் பட்டிருந்து. நள்ளிரவு 1 மணிக்கு பம்பை இசை முழங்க மயான பூஜை தொடங்கியது.

    அப்போது அம்மன் அருளாளி அருண் சாமி வந்து ஆடியபடி, அம்மன் உருவத்தை சிதைத்து எலும்பை வாயில் கவ்வியபடியே பிடி மண்ணை எடுத்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மாசாணி தாயே என பக்தி கோஷம் எழுப்பினர்.

    இந்த பூஜையில் ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ மாசாணி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் வள்ளி கும்மியாட்டமும் நடைபெற்றது. இதனையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

    மயான பூஜையையொட்டி அங்கு ஆனைமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை நடந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.

    25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திரளான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 26-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 27-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது.
    • பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் கோவில் பகுதியில் குறவர் நடனம், புலியாட்டம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி எழுந்தருளினார். பின்னர் ஒசூர் பகுதியில் சுவாமி சப்பர வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமிக்கு தோங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.

    முக்கிய வீதி வழியாக சப்பர வீதி உலா வந்தது. பின்னர் காலை 7.30 மணியளவில் கோவிலை சென்றடைந்தது. கோவில் முன்பு 30 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யபட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து காலை 8 மணியளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அதை தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கினர்.

    திருவிழாவில் தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.

    • 60 அடி நீள குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள ஒலகடம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீராஜராஜேஸ்வரி சொக்கநாச்சி அம்மன், மாரியம்மன், அக்கரை ப்பட்டி முனியப்பன் ஆகிய கோவில்களின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக அம்மாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சொக்கநாச்சி அம்மன் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கோவில் முன் அமைக்கப்பட்ட 60 அடி நீள குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் பவானி, அந்தியூர், கோபி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனையடுத்து கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் 9-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    • கோவிலில் கொடி ஏற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 21 -ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணி அளவில் குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவையை அடுத்த கோவைபுதூர் என் பிளாக்கில் ஸ்ரீபத்திரகாளி அம்மன், ஸ்ரீகருப்பராயர், ஸ்ரீ குரு சக்தி நாதர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 14-வது ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா இன்று தொடங்கியது.

    இன்று காலை 4.30 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. காலை 7 மணிக்கு கோ பூஜையும், 7:45 மணி அளவில் சப்த கன்னி பூஜையும் நடைபெற்றது. இன்று மாலை 6.30 மணி அளவில் நாக பிள்ளையார் கோவிலில் இருந்து கொடிக்கம்பம் ஊர்வலமாக எடுத்து வந்து பத்ரகாளி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாளை புதன்கிழமை மாலை 7 மணி அளவில் பிரத்தியங்கரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. 20-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 6.45 மணி முதல் மாலை 8 மணி வரை சண்டி பூஜை, ஹோமம் நடைபெற உள்ளது.

    21 -ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.45 மணி அளவில் குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 22 -ந் தேதி சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் குருதி பூஜை நடைபெற உள்ளது. 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.35 மணிக்கு நாக பிள்ளையார் கோவிலில் இருந்து பட்டு, படைக்கலன், தீர்த்தக்குடம் ஆலயத்திற்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 24 -ந் தேதி திங்கட்கிழமை காலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற உள்ளது. பின்னர் சிறப்பு பூஜையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    காலை 8.45 மணிக்கு குண்டத்திற்கு பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சகல வித வாத்தியங்களுடன் சக்தி கரகம் எடுக்க கோவிலில் இருந்து குளத்துப்பாளையம் கோகுலம் காலனி பொன்னுசாமி கவுண்டர் தோட்டத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சி பூஜையும் அன்னதானமும் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு சகல வித வாத்தியங்களுடன் பொன்னுசாமி கவுண்டர் தோட்டத்திலிருந்து சக்தி கரகம் எடுத்து கோவைப்புதூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு 8 00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 25-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மகா அபிஷேகமும் அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. 10 மணிக்கு மேல் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

    மதியம் 12 மணிக்கு உச்சி பூஜையும், கருப்பராயர் காவடி எடுத்து விளையாடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மதியம் 3 மணிக்கு மேல் நாக பிள்ளையார் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீட்டு விழாவும், 5 மணிக்கு கரகம் கரைப்பதற்கு புறப்பட்டு கோவைபுதூர் ஓம் சக்தி நகர் குளத்து தோட்டத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 7.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்ற பின்பு கோவில் நடை அடைப்பு நடைபெறும்.

    பின்னர் மே மாதம் 1-ந் தேதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்படும். அன்று மதியம் 12 மணிக்கு கருப்பராயருக்கு உச்சி பூஜை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சித்தர் சக்திநாதர் அறக்கட்டளை நிறுவனர் ஆம் ஸ்ரீ சிவஜோதி சித்தரையா செய்து வருகிறார். மேலும் பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பத்திரகாளி அம்மன் அருள் பெற்று செல்லுமாறு விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

    • தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஒன்றரை மாதம் திருவிழா நடக்கிறது.

    இந்த கோவில் திருவிழாவின் போது நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மதத்தினர் இணைந்து குண்டம் திருவிழாவினை நடத்துவது சிறப்பம்சமாகும்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்து.

    இதனைத் தொடர்ந்து மாலை தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலத்துடன் குண்டம் இறங்க காப்பு கட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குழந்தைகளுடன் ஊர்வலமாக வி.பி. தெரு காய்கறி மார்க்கெட் அருகே குண்டம் அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் தந்தி மாரியம்மன் குண்டத்தை 3 முறை வலம் வந்ததை தொடர்ந்து, காப்பு கட்டிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் குண்டம் இறங்கினர்.

    குண்டம் திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் குண்டம் நிகழ்ச்சியை பார்த்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவ நற்பணி மன்றம் மற்றும் அறநிலையத்துறை செய்திருந்தது.

    • பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது.
    • 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    பெருமாநல்லூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்ர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது. இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினரின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், அலட்சியத்தாலும் குண்டம் திருவிழாவில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. குண்டம் இறங்குவதில் ஏராளமான பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர். இதன்காரணமாக 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    விரதம் இருந்து குண்டம் இறங்க வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க கோவிலுக்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தன. இந்தநிலையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்த ஒட்டுமொத்த இரும்பு கொட்டகையும் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் இவ்வளவு அலட்சியம் காட்டியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இந்து அல்லாதவர்களுக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது. குண்டத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு பெருமாநல்லூர் நால்ரோட்டில் இந்து முன்னணி சார்பில் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • நாளை 4-ந்தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • பக்தர்கள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் நாளை 4-ந்தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இதையொட்டி நேற்று பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். நேற்று பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்களும் அங்கு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்க ஆங்காங்கே பல்வேறு இடங்களில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

    ×